லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவிப்பு

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியதாக சீனா தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இரு நாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து உள்ளன.

எனினும் இந்த படைகளை திரும்பப் பெற்று அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பும் சுமார் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. 

இதில் கடந்த மாதம் 24 ஆம் திகதி நடந்த 9 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து கவச வாகனங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் வீரர்களை திரும்பப் பெறுவது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டிருந்தன.

அதன்படி பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து சீனா மற்றும் இந்திய முன்கள வீரர்களின் ஒழுங்கமைவு மற்றும் ஒத்திசைவு சார்ந்த படை விலக்கல் 10 ஆம் திகதி (நேற்று) தொடங்கியதாக சீனா தெரிவித்துள்ளது. 

கடந்த 9 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும் சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். 

எனினும் இது தொடர்பாக இந்திய ராணுவமோ, பாதுகாப்பு அமைச்சகமோ எந்த தகவலும் வெளியிடவில்லை. அதேநேரம் எல்லையில் இருந்து பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற தளவாடங்கள் திரும்பப் பெறப்பட்டு வருவதாக எல்லையோர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் லடாக் நிலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment