சிங்களம், தமிழ் மொழிகள் இணைந்ததாக தேசிய கீதம் உருவாக்கப்பட வேண்டும் : ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

சிங்களம், தமிழ் மொழிகள் இணைந்ததாக தேசிய கீதம் உருவாக்கப்பட வேண்டும் : ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பி

நூருல் ஹுதா உமர் 

இலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தேசிய கீதமே. அன்று பிரித்தானியர்கள் வழங்கிய அனுமதிக்கு இன்றும் நாம் தீர்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். தமிழ் ஒரு கீதமும், சிங்களத்தில் ஒரு கீதமும் இசைத்தல் இரு நாடு என்ற உணர்வை கொடுக்க முடியும். கடந்த வருடமும் கூறினேன் இரு மொழிகளும் இணைந்ததாக ஒரே கீதம் உருவாக்கப்படல் வேண்டும் என தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சக்கி தலைமையில் நீர்ப்பூங்காவில் நேற்று நடைபெற்ற 73வது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் பேசிய அவர், நான்கு மதங்களும் கொண்டாடும் சிவனொளி பாதமலையை கொண்ட இந்த நாடு புனித பூமி. உலகின் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. திரும்பும் திசையெல்லாம் அழகு நிறைந்த செல்வச் செழிப்பு நிறைந்த நாடே எம் நாடு. கடந்த காலங்களில் வெள்ளையர்களினாலும், வல்லரசுகளினாலும் எமது நாடு சுரண்டப்படுகின்ற போது செய்வதறியாது இருந்த நாம் எம்மால் முடியுமான போராட்டங்களை ஒற்றுமையாக முன்னெடுத்துவந்த காலகட்டங்களில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலை வந்தமையால் திருகோணமலை துறைமுக பகுதியை தவிர ஏனைய நிலங்களுக்கு விடுதலை கிடைத்தாலும் கால ஓட்டத்தில் அதனையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.

சுதந்திரத்தின் பின்னர் கூட எமது நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவும் எமது நாட்டின் துறைமுகங்களை பயன்படுத்தி ஏனைய யுத்தங்களை செய்யவும் காலனித்துவ நாடுகள் பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறார்கள். எமது காலத்தில் நாங்கள் பலவற்றையும் கண்டுள்ளோம். 1915 லையே எமது நாட்டில் இனக்கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டு விட்டது. அது இன்னும் முடிந்த பாடில்லை. அதன் விளைவாக பாதுகாப்பு படை வீரர்கள் பலரும் உயிர்த்தியாகம் செய்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கவீனம் அடைந்தும் இருக்கிறார்கள். தமிழ் மக்களின் சார்பில் உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து இருக்கிறார்கள். இன்னும் தமது உறவுகளை தேடி மூத்த தாய்மார்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைகளை முடிக்க கூடாது என்பதற்காக கடந்த காலங்களில் குரங்கு அப்பம் பிய்ப்பது போல பிரச்சினைகளை கையாண்டுள்ளார்கள். இதனால் நாடு மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பெயர்தாங்கிய சிலர் செய்த மனிதாபிமானமற்ற ஈஸ்டர் தாக்குதலினால் இனவாத முகங்களினுள் பேசமுடியாதவர்களாக இருக்கிறோம். இந்த சிறிய அழகிய நாட்டில் சுதந்திரத்தின் பின்னர் யாரும் குடியேறவில்லை. இங்கே வாழும் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிங்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் இலங்கையர்களே. நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து நாம் எல்லோரும் நிம்மதியாக வாழக்கூடிய அரசியலமைப்பை வரையவேண்டிய தேவையுடைய நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரே நாடு ஒரே சட்டத்தை பற்றி அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ளாமல் பலரும் பேசுகிறார்கள். மதம் என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தும் விடயமல்ல. எல்லைகள் கடந்த விடயம் அது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பது பிரித்தானியர்கள் விட்ட தவறை திருத்தி எமது நாட்டை வழிநடத்த நாங்கள் எல்லோரும் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதையே குறிக்கிறது. அதற்கு பிழையான அர்த்தங்களை கற்பிக்க சிலர் முனைகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment