கொங்கோவின் புடெம்போ நகருக்கு அருகில் புதிய எபோலா தொற்று சம்பவம் ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆட்கொல்லி வைரஸின் நோய் அறிகுறிகள் பெப்ரவரி 1 ஆம் திகதி பெண் ஒருவரிடம் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி மருத்துவமனையில் வைத்து அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வைரஸ் முன்னர் பரவியபோது அந்தத் தொற்றுக்கு ஆளான நபரையே இந்தப் பெண் திருமணம் புரிந்துள்ளார்.
“மாகாண தடுப்புக் குழு ஒன்று ஏற்கனவே கடுமையாக பணியாற்றி வருகிறது. அதற்கு உதவியாக தேசிய தடுப்புக் குழு ஒன்று விரைவில் புடெம்போ நகருக்கு செல்லவுள்ளது” என்று அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இறந்த அந்தப் பெண்ணுடன் தொடர்புபட்ட 70 க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இந்த நடவடிக்கைகளுக்கு உதவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எபோலா தொற்றின் சராசரி உயிரிழப்பு வீதம் 50 ஆக உள்ளதோடு தீவிரமான பெருந்தொற்றின்போது அது 90 வீதமாக பதிவாகியுள்ளது.
எபோலா பாதிப்பு கடுமையான வாந்தியெடுத்தல் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது மற்றும் உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.
1976 ஆம் ஆண்டில் எபோலா ஆற்றின் அருகே வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து கொங்கோ நாடு இதுவரை 11 முறை மிகப்பெரிய எபோலா பரவலை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment