5 இலட்சம் தடுப்பூசிகளை நாளை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பு, சிறந்த திட்டமிடலினால் கொவிட் தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் சுதர்ஷனி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

5 இலட்சம் தடுப்பூசிகளை நாளை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பு, சிறந்த திட்டமிடலினால் கொவிட் தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் சுதர்ஷனி

(இராஜதுரை ஹஷான்)

5 இலட்சம் கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகள் நாளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் 2 இலட்சம் தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படும். சிறந்த திட்டமிடலினால் கொவிட் வைரஸ் தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கொவிட் வைரஸ் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது. பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கடந்த வாரம் முதல் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 வீதமாக குறைவடைந்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 128 மில்லியன் தடுப்பூசிகள் உலகளாவிய மட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 75 சதவீதமான தடுப்பூசிகள் 10 நாடுகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளன.

130 நாடுகளில் 2.5 பில்லியன் அளவிலான மக்களுக்கு இதுவரையில் கொவிட் வைரஸ் தடுப்பூசிகள் ஏதும் வழங்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் இலங்கை கொவிட் வைரஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக பெற்றுக் கொண்டு முதற்தர சேவையாளர்களுக்கு சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டு மக்களுக்கும் விசேடமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்திய அரசாங்கத்தினால் 5 இலட்ச தடுப்பூசிகள் நிவாரண அடிப்படையில் கிடைக்கப் பெற்றன.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்தோம். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவே ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகளை வழங்கினோம்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வைரஸ் தொற்று தீவிரமாக பரவியதாலும், அதிக மரணங்கள் பதிவானதாலும் இவ்விரு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

30 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டது. 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment