48 மணித்தியாலத்திற்குள் தீர்வில்லையேல் தொடர் பணிப்புறக்கணிப்பு - அரசாங்கத்தை எச்சரிக்கும் ரயில்வே தொழிற்சங்கம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

48 மணித்தியாலத்திற்குள் தீர்வில்லையேல் தொடர் பணிப்புறக்கணிப்பு - அரசாங்கத்தை எச்சரிக்கும் ரயில்வே தொழிற்சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

ரயில் சேவையில் நிலவும் குறைபாடுகளுக்கு 48 மணித்தியாலத்துக்குள் அரசாங்கம் தீர்வை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நாளை முதல் சட்டப்படி சேவையில் ஈடுப்படுவார்கள். ரயில் நிலையத்தில் மேலதிக சேவையில் ஈடுபட மாட்டார்கள் என ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

மருதானையில் உள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரயில் சேவையில் 1000 ற்கும் மேற்பட்ட தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. வெற்றிடங்களுக்கு சேவையாளர்களை இணைத்துக் கொள்ள ரயில்வே திணைக்களம் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 4000 ஆயிரம் கனிஷ்ட ஊழியர்களுக்கான வெற்றிடமும் 250 புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சேவையிலும் வெற்றிடம் நிலவுகிறது.

ரயில் போக்குவரத்து சேவையில் சமிக்ஞை காட்டுபவர்களின் சேவையிலும் வெற்றிடம் நிலவுகிறது. சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் சமிஞ்சை காட்டுபவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு 6 மாத காலமாக சம்பளம் வழங்காத காரணத்தினால் அவர்கள் கடந்த வாரம் முதல் சேவையில் இருந்து விலகயுள்ளார்கள்.

ரயில் நிலையத்தில் மூன்று மொழிகளிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என அரச கரும மொழிகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே அறிவித்தல் விடுக்கப்படுகின்றன. இச்சேவையிலும் 100 வெற்றிடங்களும், ரயில் நிலைய சுகாதார சேவையாளர் சேவையில் 320 வெற்றிடங்களும் நிலகின்றன

ரயில்வே திணைக்களம் நட்டமடையும் திணைக்களம் என்று குறிப்பிட்டு ரயில் சேவையினை தனியார் தரப்பினருக்கு வழங்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

திணைக்களத்தை அபிவிருத்தி செய்ய நாம் முன்வைத்த திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான நிலங்கள் தனியார் தரப்பினருகக்கு வழங்கப்பட்டுள்ளன இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு காணப்படுகின்றன.

பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு 48 மணித்தியாலத்துக்குள் தீர்வை வழங்காவிடின் தொடர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தயாராகுவோம். விரைவாக நிறைவேற்ற கூடிய கோரிக்கைகளாவது அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad