பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 42 பேர் பலி - மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரம் - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 42 பேர் பலி - மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரம் - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பாட்னா கிராமம் அருகே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 54 பேர் பயணம் செய்தனர். அப்போது அப்பகுதியில் கால்வாய் செல்லும் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதனால் பயணிகள் அலறினார்கள். தறிகெட்டு ஓடிய பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்ததும் கிராம மக்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 7 பேர் கால்வாயில் நீந்தியபடி கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டனர்.

மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. தண்ணீர் அதிகமாக இருந்ததால் 35 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கால்வாயில் இருந்து அவர்களின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது.

மேலும், 12 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ளவர்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

இத்துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபா வழங்க உத்தரவிட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad