சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே குண்டு வெடிப்பு - 3 பேர் பலி, 8 பேர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 14, 2021

சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே குண்டு வெடிப்பு - 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்

சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகாதிசு தொடர் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.‌

இந்த நிலையில் மொகாதிசுவில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் போலீசார் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது வெடி குண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் அந்த சோதனைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர். வெடி குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகே நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் சோமாலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

No comments:

Post a Comment