நாளை முதல் மேல் மாகாண O/L மாணவர்களுக்கு பாடசாலை - போக்கு வரத்திற்காக பஸ், ரயில் சேவைகள் ஆரம்பம் - சுகாதார வழிகாட்டல் தொடர்பில் விசேட சோதனைகள் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

நாளை முதல் மேல் மாகாண O/L மாணவர்களுக்கு பாடசாலை - போக்கு வரத்திற்காக பஸ், ரயில் சேவைகள் ஆரம்பம் - சுகாதார வழிகாட்டல் தொடர்பில் விசேட சோதனைகள்

நாளை (25) முதல், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஜனவரி 11ஆம் திகதி முதல், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியவாறு, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன.

ஆயினும் க.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத்திரம் முதற்கட்டமாக நாளை (25) முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்குட்பட்ட 1,576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் நாளை முதல் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, மாணவர்களின் போக்கு வரத்துக்காக, இலங்கை போக்கு வரத்து சபையின் சிசு செரிய பஸ் சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள், நாளை முதல் வழக்கம்போல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என, புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

அதற்கமைய, நாளை முதல் சுமார் 390 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பயணிகள் போக்கு வரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினரினதும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்தார்.

சமூக இடைவெளி பேணப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுப் போக்கு வரத்து தொடர்பான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்களைக் கண்டறிய விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad