கொவிட் தொற்றின் இரண்டாம் அலையால் பெண்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் - தலதா அத்துக்கோரல - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

கொவிட் தொற்றின் இரண்டாம் அலையால் பெண்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் - தலதா அத்துக்கோரல

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றின் இரண்டாம் அலையில் ஆடை தொழிற்சாலையில் பணி புரியும் பெண்களும், நாட்டுக்கு பாரியளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள பணிப் பெண்களும் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், நாம் மகளிர் தொடர்பான யோசனைகளை முன்வைத்தபோது அதற்கு எதிராக கூச்சலிடப்பட்டது. ஆனால் இன்று பெண்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் பேசுவதற்குக்கூட ஒரு அமைச்சர் நியமிக்கப்படவில்லை. ஆடைத் தொழிற்சாலை மூலம் நாட்டுக்கு கூடுதல் வருமானத்தை பெற்றுக் கொடுப்பது பெண்களாவர். 

கொவிட் தொற்று பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஏற்படுத்திக் கொடுக்கும் பெண்களை அழைத்து வருவதற்கு கூட அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்கள் இரண்டாம் அலையின் பின்னர் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். பெருந்தோட்டப் பகுதிகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை வெளிப்படுத்தப்படவில்லை. 

இவ்வாறான நிலையில் பெண்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எமது ஜனாதிபதி வேட்பாளர் கருத்து தெரிவித்த போது அதனைப் பற்றி பேச ஆண்களுக்கு உரிமையில்லை என்று கூறினார்கள்.

40000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் 30000 பேர் குணமடைந்துவிட்டனர் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். ஆனால் 40000 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று யாரும் கூறுவதில்லை.

பெண்களுக்கான அமைச்சொன்றைக் கூட வழங்க முடியாத அரசாங்கத்தின் ஆட்சியில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad