அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலுக்கு நீதி கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இ.அனுசன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர் கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவுகூரல் நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளின் பின்னர் இந்த நினைவிடம் நேற்று இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக திரண்ட வண்ணமுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த செயற்பாட்டினை கண்டித்து, மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் நேற்று இரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தூபி இடிப்பு இரவு வேளையில் மின் குமிழ்கள் அணைக்கப்பட்டு இரகசியமாக இடம்பெற்றதால் ஏற்கனவே நீண்ட காலமாக உள்ள தூபியும் இடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாணவர்களும் சமூக நோக்கம் கொண்டவர்களும் குறித்த பகுதியில் ஒன்று கூடினர்.

இதன்போது பிரதான தூபி இடிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதம் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலரும் கோரியபோது நிர்வாகம் மௌனம் காத்தமையால் அங்கே தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதோடு பல்கலைக்கழக வாசல் கதவு முன்பாக அதிரடிப் படையினர் ஆயுதம் தாங்கி நிற்க அரசியல்வாதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எதிரே அமர்ந்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளதாகவும் குறித்த பகுதி பரபரப்பாகவும் பதற்றத்துடன் காணப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே குறித்த போராட்டதை வலுசேர்க்கும் முகமாக அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment