(ஆர்.யசி)
இலங்கையில் பரவிக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்கும் தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும், இலங்கைக்கு தடுப்பூசிகளை தர வேண்டும் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதிக்கு மகஜர் மூலமாக அறிவுறுத்தியுள்ளதாகவும், இந்தியா - இங்கிலாந்து நாடுகளில் இருந்தும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள், அரச வைத்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக கூறினாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மரணங்களும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறவில்லை, இன்னமும் இது தனித்தனி கொத்தணிகளாகவே உள்ளது. எனவே நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த மோசமான நிலைமையொன்று காணப்படவில்லை என்பதை சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் என்னால் உறுதிப்படுத்த முடியும்.
எவ்வாறு இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி மற்றும் இந்தியா உறுதிப்படுத்தியுள்ள தடுப்பூசிகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அது தவிர்ந்து சீனாவிடம் இருந்தும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. சீனாவிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மகஜர் ஒன்றும் சீனா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹனவினால் சீன வெளிவிவகார அமைச்சின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே எமக்கு உதவி செய்ய பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. இலவசமாகவும், கடன் உதவிகளின் கீழும் எமக்கு அவசியமாக கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இலங்கைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்து இலங்கையில் 70 வீதமானவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க முடியும் என நம்புகின்றோம். அதற்குள் கொரோனா மூன்றாம் அலையோ அல்லது தற்போது காணப்படும் இரண்டாம் பரவல் நிலைமைகள் மேலும் விரிவடையவோ நாம் இடமளிக்காது மிகக் கவனமாக எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எனவே மக்கள் மிகக் கவனமாக செயற்பட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment