அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்றவர் கைது - ஜோ பைடனின் பதவியேற்புக்கு வந்ததாக போலி அழைப்பிதல் காண்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்றவர் கைது - ஜோ பைடனின் பதவியேற்புக்கு வந்ததாக போலி அழைப்பிதல் காண்பிப்பு

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற ஒரு நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதிர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரும் 20ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர். ஆனால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்துவந்தார்.

இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6ஆம் திகதி நடைபெற்றது.

அப்போது பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றிலும் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பைடன் 20ஆம் திகதி பதவியேற்பு விழாவும் பாராளுமன்ற கட்டிடமான கேபிடல்ஸ் கட்டிடத்தில்தான் நடைபெற உள்ளது.

இதனால் பாராளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடஸ் உள்ளே நுழைய நேற்று ஒரு கார் வந்தது. அப்போது அந்த காரை இடைமறித்த பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழையும் அந்த நபர் வழங்கினார். அந்த அழைப்பிதழை ஆய்வு செய்த போலீசார், அந்த அழைப்பிதல் போலி என கண்டுபிடித்தனர். 

பின்னர், அந்த காரை ஆய்வு செய்தனர். அப்போது அந்த காரில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 509 தோட்டாக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக, கார் ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த வெஸ்லி அலேன் பிலியர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற வெஸ்லி அலேன் பிலியரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். 

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment