நாடாளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளில் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும், பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றில் சகலரும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் 463 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.
எனினும், நாடாளுமன்ற பணியாளர்களுடன் நாடாளுமன்ற பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட 448 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment