முழுமையாக முடங்கியது வடக்கு, கிழக்கு மாகாணம் - கடைகள் பூட்டு, வாகன போக்கு வரத்து இல்லை - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

முழுமையாக முடங்கியது வடக்கு, கிழக்கு மாகாணம் - கடைகள் பூட்டு, வாகன போக்கு வரத்து இல்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு - கிழக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அனைத்து தமிழ் கட்சிகள், மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் இக் கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மக்களும் தமது பூரண ஆதரவை வழங்கினர்.

அதற்கமைய கதவடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நேற்று, யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதோடு, வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.

தனியார் போக்கு வரத்து சேவை இடம்பெறவில்லை. மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

அரச பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டிருந்தன. இதனால் பாடசாலையின் கல்வி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று கிளிநொச்சியிலும் ஹர்த்தால் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாட்டம் இல்லாமையால் நகர் வெறிச்சோடி காணப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோன்று மட்டக்களப்பிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்காக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் அதிகளவான பகுதிகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 08ஆம் திகதி இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம், தற்போதைய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் மாணவர்கள், தீர்வு கிடைக்கும் வகையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று அதிகாலை வரை முன்னெடுத்திருந்திருந்தனர். இதன்போது துணைவேந்தர் நேரில் சென்று அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இக்கலந்துரையாடலை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல்லையும் மாணவர்களுடன் இணைந்து துணைவேந்தர் நேற்று காலை நாட்டினார். 

இந்நிலையில் மீண்டும் இத்தகையதொரு சம்பவம் நடைபெற கூடாதென்பதை வலியுறுத்தி வடக்கு - கிழக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment