சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முகப்புத்தக பகிர்வால் மேலும் அச்சத்தில் ஹரின் பெர்ணான்டோ - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முகப்புத்தக பகிர்வால் மேலும் அச்சத்தில் ஹரின் பெர்ணான்டோ

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், முகப்புத்தகத்தில், ஜனாதிபதியின் கருத்தினை (அம்பாறையில் - உகன உரை) ஆமோதிக்கும் விதமாக முகப்புத்தகத்தில் பதிவொன்றினை பகிர்ந்துள்ளமையானது, இலங்கை எந்த திசையில் பயணிக்கிறது என தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவு செய்துள்ள ஹரீன் பெர்ணான்டோ, இந்த முகப்புத்தக பதிவு பகிர்வு தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அவதானம் செலுத்தியிருக்கும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அம்பாறை - உகன பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதான கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்த பின்னணியில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு ஜனாதிபதியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளமை அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் கருத்து அடங்கிய காணொளி மற்றும் பிரதியை இணைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் நேற்று மாலை 6.30 மணி வரை பொலிஸ் திணைக்களம் எந்த பதிலையும் வெளியிடவில்லை. 

தேசத்துரோகம், இனப்படுகொலை, பயங்கரவாத, கொடூரமான செயல்களில் ஈடுபட்டவருக்கும் பாராளுமன்றத்தில் கருத்து சுதந்திரத்திற்காக தமது அடிப்படை உரிமையை நடைமுறைப்படுத்தும் மக்கள் பிரதிநிதிக்கும் இடையிலான வேறுபாட்டினை அடையாளம் காண்பதில் ஜனாதிபதி தோல்வி கண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி தனது சேவையில் தொடர்ச்சியாக தோல்வியடையும் வரை தமது உயிருக்கு எவ்வாறான ஆபத்து ஏற்பட்டாலும், அவர் விரும்பாவிட்டாலும் உண்மையை உரைக்கும் பொறுப்பை தாம் நிறைவேற்ற வேண்டும்.

நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடவில்லை என்பதை நினைவுபடுத்த வேண்டும். தமிழ் மக்களை வாக்களிப்பிலிருந்து தடுப்பதற்கு நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுக்கு இலஞ்சம் வழங்கவில்லை. இதுவரை எவரைவிடவும் அதிகளவிலான பொலிஸ் அதிகாரிகளை கொலை செய்த கருணா அம்மானை கட்டியணைக்கவில்லை. அனைத்தையும் விட நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை பிரஜையே தவிர வேறொரு நாட்டின் பிரஜையல்ல. 

நான் அவருக்குப் பிடிக்காத விடயங்களை பற்றி பேசினால் என்னை "நாயை போன்று கொலை செய்வதற்கு" அவரால் முடியும் என ஜனாதிபதி தெளிவாக கூறினார். பாதுகாப்புப் படைகளின் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நந்தசேன கோத்தபாய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் பாரதூர தன்மையை கருத்திற்கொண்டு அவரால் எனக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது உணர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பில் மேலும் சந்தேகம் கொள்வதற்கு எனக்கு காரணம் இல்லை. அது உறுதியானது. 

நான் அவருடைய முதற்பெயரை குறிப்பிட்டதால் மாத்திரம் ஜனாதிபதி இந்தளவு குழப்பமடைந்தமை தொடர்பில் நான் ஆச்சரியமடைகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கடிதத்தில் இறுதியில், தாம் உயிரிழந்தால் இதுவரையான காலத்தில் அத்தகைய அச்சுறுத்தலை விடுத்த ஒரே ஒருவரின் அபிப்பிராயத்திற்கு அமைய அது இடம்பெறும் என நினைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா திபருக்கு அறிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகளை சபாநாயகர், சட்டமா அதிபர், கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad