அறிவித்தலை மீறியமைக்காக ஏறாவூரில் புடவைக் கடைகளுக்கு சீல் வைப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

அறிவித்தலை மீறியமைக்காக ஏறாவூரில் புடவைக் கடைகளுக்கு சீல் வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை அனுசரிக்காமல் புடவைக் கடைகளுக்குள் வியபாரம் மேற்கொண்டமைக்காக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினர் சில புடவைக் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

கொரோனா தவிர்ப்பு செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி கட்ந்த திங்கட்கிழமை 11.01.2021 முதல் வியாழக்கிழமை 14.01.2021 வரை பலசரக்குக் கடைகள், புத்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படுதல் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவித்தலை மீறி சில புடவைக் கடைகளுக்கு உள்ளே தைப் பொங்கல் உடுதுணிகள் வியாபாரம் இடம்பெற்றாலேயே தாம் இவ்வாறு கடைகளுக்குச் சீல் வைத்ததாக பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அரசாங்க இலச்சினையுடன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவித்தலில் தனிமைப்படுத்தப்பட்ட வர்த்தக நிலையம் கண்காணிக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இங்கு வெளியாட்கள் எவரும் உட்செல்ல வேண்டாம். குறிப்பிடப்பட்ட 12.01.2021 தொடக்கம் 25.01.2021 வரை இக்காலப் பகுதியினுள் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள்” சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏறாவூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏறாவூரில் 6 புடவைக் கடைகளுக்கும் ஒரு புத்தக நிலையத்திற்கும் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad