ஒட்டு மொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்கு நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்க தீர்மானம் - எம்.கே.சிவாஜிலிங்கம் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

ஒட்டு மொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்கு நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்க தீர்மானம் - எம்.கே.சிவாஜிலிங்கம்

ஒட்டு மொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெராவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றிணைத்த அவசர கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “அரசு சாராத தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் உள்ளடங்கிய ஒரு ஆலோசனைக் குழுக் கூட்டத்தை இன்று நடத்தியிருந்தோம்.

அரசியல் கட்சிகள் என்று பார்க்கும் போது 10 அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். இதில் ஒன்பது தமிழ் அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை.

அவர்களுக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற பூர்வாங்கக் கூட்டத்திலும் அழைப்பு விட்டிருந்தோம். அதாவது, சட்டத்தரணி சுகாசுடன் தொடர்பு கொண்டபொழுது தான் வெளிமாவட்டத்தில் இருப்பதாகவும் கட்சியினுடைய தலைவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அதற்கமைய, நேற்று கட்சியினுடைய பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டபோது பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்றிரவு சுகாஸிற்கு இன்று காலை 10 மணிக்குக் கூட்டம் இருக்கின்றது என்பதனை உங்களுடைய கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அறிவிக்குமாறு நீண்ட குறும் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தோம். இன்று காலையும் அனுப்பியிருந்தேன். எனினும் எந்தப் பதிலும் வரவில்லை. எதிர்காலத்திலாவது அவர்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றோம்.

எந்தக் கட்சி, எந்த முன்னணி என்பது இங்கு பிரச்சினையல்ல. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய, அசுர வேகத்திலே செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான ஒரு தந்திரோபாய வேலைத் திட்டங்களை வகுப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிலையில், தலா இரண்டு பிரதிநிதிகளை தந்து ஒரு நடவடிக்கை குழுவை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை ஆராய வேண்டும் என பங்குபற்றிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டிருக்கின்றோம். ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் சார்பிலே ஒரே நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.

இந்த நடவடிக்கைக் குழு என்பது மக்கள் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது, ஏனைய விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பதை பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு ஒரு சரியான இலக்கை நோக்கி நாங்கள் பயணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad