தவறுதலாக சுனாமி எச்சரிக்கை செய்தி - வருத்தம் தெரிவித்த சிலி அரசு - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

தவறுதலாக சுனாமி எச்சரிக்கை செய்தி - வருத்தம் தெரிவித்த சிலி அரசு

அண்டார்டிகாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள சிலி நாட்டில் தவறுதலாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

அண்டார்டிக் பிரதேசத்தில் உள்ள தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக பதிவாகியிருந்தது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக சிலி தேசிய அவசர கால அலுவலகம் எச்சரிக்கை விடுத்தது. அண்டார்டிகா கடலோர பகுதியில் உள்ள சிலி ராணுவ தளத்தில் உள்ளவர்களை வெளியேற்றும்படி அறிவுறுத்தியது. 

மேலும் சுனாமி அபாயம் இருப்பதால், சிலியின் கடலோர பகுதிகளில் உள்ளவர்களும் வெளியேறும்படி உள்துறை அமைச்சம் எச்சரிக்கை விடுத்தது. பொதுமக்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல்களையும் அனுப்பியது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

லா செரீனா, சாண்டியாகோவின் வடக்கே உள்ள வால்பரைசோ உள்ளிட்ட கடலோர நகரங்களில் உள்ள மக்கள் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். 

அதன் பின்னர், தவறுதலாக சுனாமி எச்சரிக்கை தொடர்பான செய்தியை அனுப்பியதாக கூறி, உள்துறை அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது. 

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் தேசிய அவசரகால அலுவலக அதிகாரி, பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். 

‘நாட்டு மக்களிடையே உள்ள பீதியை போக்கி மன அமைதியை வழங்க விரும்புகிறோம். நாடு முழுவதிலும் உள்ள கடலோர பகுதி மக்களை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை என்று செய்தி வெளியிடுங்கள். அண்டார்டிகா தளத்தில் உள்ளவர்களை மட்டுமே வெளியேற்ற வேண்டும். சுனாமி எச்சரிக்கை தொடர்பான தகவல்களால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். தொழில்நுட்ப குறைபாடுகளால் இந்த தவறு நேர்ந்துவிட்டது’ என அந்த அதிகாரி கூறினார். 

தவறான சுனாமி எச்சரிக்கை என்று தகவல்கள் வெளிவரத் தொடங்கியதும், பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு திரும்பி வந்தனர். அதன் பின்னர் அண்டார்டிகா பகுதிக்கான சுனாமி எச்சரிக்கையும் திரும்ப பெறப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad