புதிய அரசியலமைப்பு உருவாக்கததில் அனைத்து இன மக்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவது அவசியம், மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம் என்கிறார் அமைச்சர் காமினி லொகுகே - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

புதிய அரசியலமைப்பு உருவாக்கததில் அனைத்து இன மக்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவது அவசியம், மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம் என்கிறார் அமைச்சர் காமினி லொகுகே

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பு உருவாக்கததில் அனைத்து இன மக்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். ஒரு தரப்பினரது கோரிக்கை தேசிய பாதுகாப்புக்கும், பிற இனத்தவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என்பதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என போக்கு வரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் பல விடயங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்துகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் மத்தியில் மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் தடையில்லாமல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ள அபிவிருத்தி நிர்மாண பணிகளை மே மாதத்துக்குள் முழுமைப்படுத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி நிர்மாண பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க ஜனாதிபதி அனைத்து அமைச்சுக்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்கம் மாறும்போது மக்களுக்காக முன்னெடுக்ப்பட்ட அபிவிருத்திபணிகளை தடை செய்வது பொருத்தமற்ற செயற்பாடாகும். 

கடந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் முன்னெடுத்த துறைமுக நகரம் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளை அரசியல் பழிவாங்களுக்காக இடைநிறுத்தியது. இதன் தாக்கத்தை அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ளது.

புதிய அரசயலமைப்பு குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கையினை எடுத்துள்ளது. அனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது அவசியமாகும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக்கு, பிற இனத்தவரின் உரிமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களின் கருத்துக்கள் அமைய வேண்டும்.

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம். மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால் தற்போது தேர்தல் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் அரசியல் மற்றும் சமூகமட்டத்தில் தோற்றம் பெற்றிருக்காது. மாகாண சபைத் தேர்தல் எம்முறையில் நடத்த வேண்டும் என்பது குறித்து சிக்கல் நிலை காணப்படுகிறது. ஆகவே மாகாண சபை குறித்த சிறந்த தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment