மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தேசிய பிரச்சினையாக பார்ப்பேன், ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரம் மிகுதி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 17, 2021

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தேசிய பிரச்சினையாக பார்ப்பேன், ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரம் மிகுதி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சித் தலைவர் தேசிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும், ஏனையோர் ஏனைய பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடும் கருத்து தவறானதாகும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தேசிய பிரச்சினை என்ற கோணத்தில் பார்ப்பேன். மாறுபட்ட ஒரு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளை பகிரங்கப்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மொனராகலை - புத்தள ஒக்கம்பிடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற 'எதிர்க்கட்சி - நடமாடும் சேவை' கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சியின் செயற்பாடு முரண்பாடுகளை ஏற்படுத்துவது என அநேகமானோர் கருதுகிறார்கள். வரலாற்றில் இதுவரை காலமும் செயற்பட்ட எதிர்க்கட்சியினை கருத்திற்கொண்டு அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார்கள். இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி மாறுபட்ட எதிர்க்கட்சியாக செயற்படும்.

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். சிறிய எதிர்க்கட்சியாக செயற்பட்டு நாடு தழுவிய ரீதியில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். பிரச்சினைகளை ஏற்படுத்தி தவறான வழியில் இலக்கினை அடைவது எதிர்க்கட்சியின் செயற்பாடல்ல.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எதிர்கட்சியாக செயற்பட்டும் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும். மக்களின் பிரச்சினைகளை பகிரங்கப்படுத்தி அதனை உயர்மட்ட அரசியல் வரை எம்மால் கொண்டு செல்ல முடியும்.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கவனம் செலுத்தும். அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

தேசிய பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டும், ஏனைய பிரச்சினை குறித்து ஏனையோர் பேச வேண்டும் என அரசியல் களத்தின் பிரதிவாதிகள் குறிப்பிடுகிறார்கள்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளை தேசிய பிரச்சினை என்ற கோணத்தில் பார்ப்பேன், தேசிய பிரச்சினை, பிரதேச பிரச்சினை, மாகாண பிரச்சினை என்ற வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரம் மிகுதியாகும்.

மக்கள் மத்தியில் செல்லும் போது அவர்கள் தங்களின் பிரச்சினைகளை குறிப்பிடுகிறார்கள். அதிகாரம் இல்லாவிடினும் ஒரு தீர்வை பெற முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆகவே மக்களின் பிரச்சினைகளை தேசிய பிரச்சினையாகவே கருதுவேன். பிரச்சினைகளை ஒருபோதும் வேறுப்படுத்தி பார்க்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment