பாடசாலை செல்லும் மாணவர்கள் பொதுப் போக்கு வரத்தினை தவிருங்கள் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நிலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பொது போக்கு வரத்துக்களைத் தவிர்த்து தமது பெற்றோரின் சொந்த வாகனங்களில் பாடசாலைக்குச் செல்வது சிறந்தது.
குறிப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிப்பதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு இணங்க பாடசாலையின் வகுப்பறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு சுகாதார அமைச்சினால் பாடசாலை மாணவர்களின் சுகாதார நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிதியீட்டங்களின் மூலம் மாணவர்களின் சுகாதார நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு பாடசாலைகளை பொறுத்த வரையில் அகச் சூழலை பொருத்த வரைக்கும் பாடசாலை வகுப்பறைகளில் இரண்டு கட்டங்களாக மாணவர்கள் பாடசாலைக்கு உள்வாங்கப்பட உள்ளார்கள்.
அதாவது ஒரு தொகுதியினர் கிழமையில் மூன்று நாட்களும் அடுத்தவர் மூன்று நாட்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட உள்ளார்கள்.
அத்தோடு பாடசாலையின் அகச்சூழலை பொருத்தவரை சுகாதார நடைமுறைகளை பேணுவதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புறசூழலைப் பொறுத்தவரை அருகில் உள்ள கடைகள் மற்றும் போக்கு வரத்து போன்ற இதர செயற்பாடுகளில் சில இடர்பாடுகள் காணப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பொதுப் போக்கு வரத்துகளை தவிர்த்து பெற்றோர்களின் சொந்த வாகனங்களில் வருவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதில் இருந்து மாணவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு ராணுவத்தினரின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியுடனும் அந்தந்த பிரிவு படைப் பிரிவினர் உதவியையும் கோரியுள்ளேன். எனவே அவர்களின் உதவி மூலம் பாடசாலைகள் சுத்தம் செய்யப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு மாணவர்கள் பாடசாலைக்கு வழமைபோல் அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment