கிழக்கு முனைய விவகாரத்தில் ஆளுந்தரப்பின் இரண்டாவது நாடகம் அரங்கேறியுள்ளது - உண்மையில் கோத்தாபயவுடன் ஒப்பிடுகையில் மஹிந்த சிறந்தவர் : ஹிருணிகா பிரேமசந்திர - News View

About Us

About Us

Breaking

Sunday, January 31, 2021

கிழக்கு முனைய விவகாரத்தில் ஆளுந்தரப்பின் இரண்டாவது நாடகம் அரங்கேறியுள்ளது - உண்மையில் கோத்தாபயவுடன் ஒப்பிடுகையில் மஹிந்த சிறந்தவர் : ஹிருணிகா பிரேமசந்திர

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் போன்று ஆளுந்தரப்பின் இரண்டாவது நாடகம் தற்போது அரங்கேறியுள்ளது. துறைமுக தொழிற்சங்கங்களின் போராட்டங்களை முடக்குவதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதற்கு ஏமாந்துவிடக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

தேசிய சொத்துக்களை வரலாற்றில் எந்த அரசாங்கத்திலும் இல்லாதளவிற்கு இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் பகிரிந்தளித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஆரம்பத்திலேயே குரல் கொடுக்கவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் துறைமுக சேவைக்கு சீன அமைச்சரொருவரை நியமிக்கக் கூடிய நிலைமை கூட தோற்றம் பெறும் என ஹிருணிகா சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஆளுந்தரப்பிலுள்ள சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆரம்பத்தில் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டவர்கள்தான் இறுதியில் அதற்கு வாக்களித்தார்கள். 

எனவே நாட்டின் தேசிய சொத்துக்கள் தொடர்பில் பற்றும் பொறுப்பும் இருந்தால் தொழிற்சங்கங்களை மாத்திரம் நம்புமாறு கோருகின்றோம். காரணம் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் தொழிற்சங்கள் கட்சி பேதமின்றி இணைந்துள்ளன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டங்களை முடக்குவதற்காகவே எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு நாடகமாடுகின்றனர். இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட ஜனாதிபதி அவர்களை அழைத்து எவ்வித கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை. 

காரணம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைச்சர்களின் அமைச்சு பதவிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் பறிபோகக் கூடும். அவ்வாறு ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் தற்போது குரலை உயர்த்தியுள்ள அமைச்சர்களும் மௌனமாகி விடுவார்கள் என்றார். 

உண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் ஒப்பிடும் போது மஹிந்த ராஜபக்ஷ சிறந்தவராவார். அதனால்தான் அவர்களுக்கிடையிலும் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகிழ்ச்சியாக சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான எவ்வித சூழலும் இலங்கையில் இல்லை என்றார்.

No comments:

Post a Comment