ஈஸ்டர் தாக்குதலின் உண்மை நிலை விரைவில் வெளிவரும், வரி குறைப்பினால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை - கபீர் ஹாசிம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

ஈஸ்டர் தாக்குதலின் உண்மை நிலை விரைவில் வெளிவரும், வரி குறைப்பினால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை - கபீர் ஹாசிம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்லும் நிலையிலும் அரசாங்கத்தின் உற்ற நண்பர்கள் அதன் மூலம் உழைத்து வருகின்றனர். ஆனால் வாக்களித்த மக்களுக்கு அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. அத்துடன் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி வெளிப்பட்டுக் கொண்டிருகின்றது. அதன் உண்மை நிலை விரைவில் வெளியில் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டின் தற்போதைய கொவிட்19 ஐ கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் பலவீனம் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் இனவாதத்தை தூண்டியே ஆட்சிக்கு வந்தது. சிறுபான்மை இனத்தவர்களால்தான் சிங்கள மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குகள் கிடைக்கப் பெறாமல் இருக்கின்றன. அதனால் சிங்கள மக்களின் பங்குகளை பெற்றுத் தருவதாக தெரிவித்தே தேர்தல் பிரசாரம் செய்தார்கள். அதனால் அரசாங்கத்துக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் அரசாங்கம் சிங்கள மக்களின் பங்குகளை கொடுத்ததா என கேட்கின்றேன்.

அதேபோன்று அரசாங்கத்தின் இனவாத பிரசாரத்துக்கு இலகுவாக ஈஸ்டர் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றது. ஆனால் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணையில், தாக்குதல் சம்பந்தமான பின்னணிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் உண்மை நிலை விரைவில் வெளிப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

மேலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இதற்கு கொராேனாதான் காரணம் அல்ல. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் வரி குறைப்பை செய்தது. வரி குறைப்பினால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. 

பொருட்களின் விலை மேலும் அதிகரித்திருக்கின்றது. இதனால் நாட்டின் வருமானம் 30 ஆயிரம் கோடி இல்லாமல் போயுள்ளது. அப்படியானால் இதன் லாபம் யாருக்கு சென்றிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ஷ்வை சுற்றி இருப்பவர்களுக்கே வரி குறைப்பின் லாபம் சென்றடைந்திருக்கின்றது.

அத்துடன் தற்போது கொவிட்டை பயன்படுத்திக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உக்ரைன் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்திருக்கின்றனர். இவர்களை அழைத்து வந்திருப்பதன் மூலம் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் இவர்களை அழைத்து வந்த உதயங்கவீரதுங்க சம்பாதிக்கின்றார். 

அதனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் வாக்களித்த மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. ஆனால் ஜனாதிபதியை சுற்றி இருப்பவர்கள் அரசாங்கத்தை பயன்படுத்திக் கொண்டு சம்பாதித்து வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment