மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என நிபுணர்கள் குழு அறிக்கை கையளித்த போதும், அரசாங்கம் அதனை வைத்துக்கொண்டு இனவாத அரசியல் செய்துகிறது - ராஜித்த சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என நிபுணர்கள் குழு அறிக்கை கையளித்த போதும், அரசாங்கம் அதனை வைத்துக்கொண்டு இனவாத அரசியல் செய்துகிறது - ராஜித்த சேனாரத்ன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் காரணமாக நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்குவதா எரிப்பதா என்ற இல்லாத பிரச்சினையை பிடித்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அடக்கம் செய்ய வைரஸ் தொடர்பான சிரேஷ்ட நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியிருந்தும் அரசாங்கம் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் தற்போதைய கொவிட்19 ஐ கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் பலவீனம் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. அதனை கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். என்றாலும் அரசாங்கத்தின் ஒரு சில நடவடிக்கைகளால், சுகாதார அதிகாரிகள் விரக்தியுறும் நிலையில் இருக்கின்றனர். கொராேனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை.

அத்துடன் கொராேனா தொற்று காரணமாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கும் நிலையில் அரசாங்கம், கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதா தகனம் செய்வதா என்ற இல்லாத பிரச்சினையை தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது.

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் குழு தெளிவான அறிக்கை ஒன்றை அரசாங்கத்துக்கு கையளித்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அதனை வைத்துக் கொண்டு இனவாத அரசியல் செய்துகொண்டிருக்கின்றது.

மேலும், கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் வைரஸ் நீரில் பரவாது என இலங்கை மருத்துவ சங்கம், மருத்துவ கல்லூரி மற்றும் பல சர்வதேச அமைப்புகள் தெளிவாக அறிவித்திருக்கின்றன. அதேபோன்று வைரஸ் தொடர்பில் இலங்கையில் இருக்கும் சிரேஷ்ட நிபுணர்களும் அதனை உறுதி செய்திருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.

அத்துடன் அரசாங்கத்தில் இருக்கும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண வைரஸ் தொடர்பான சிரேஷ் நிபுணர். அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அவர் அண்மையில் செய்தியாளர் சந்திப்பொன்றின்போது கவலை தெரிவித்திருந்தார். 

அதாவது, கொவிட்டை கட்டுப்படுத்த வைரஸ் தொடர்பில் அனுபவம் இருக்கும் தன்னிடம் எந்தவொரு ஆலாேசனையும் அரசாங்கம் பெறவில்லை. அதேபோன்று வைரஸ் தொடர்பில் நாட்டில் இருக்கும் வேறு தலைசிறந்த நிபுணர்களையும் அரசாங்கத்தின் நிபுணர்குழுவில் இணைத்துக் கொள்ளவில்லை என குறிப்பிட்டிருக்கின்றார்.

அதனால் அரசாங்கம் கொவிட் தொடர்பில் ஆராய அமைத்துள்ள நிபுணர் குழுவில் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் யாரும் இல்லை. கொவிட்டை கட்டுப்படுத்த தேவையான முறையான வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தின் தேவையற்ற தீர்மானங்களால் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அவப்பெயரே ஏற்பட்டிருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment