(ஆர்.யசி)
எமது ஆட்சியில் நாட்டின் அபிவிருத்தியில் சர்வதேச முதலீட்டாளர்களை அழைத்தபோது எம்மை தேசத்துரோகிகள் என விமர்சித்தவர்கள் இன்று தமது ஆட்சியிலும் அதே சர்வதேச முதலீட்டாளர்களையே நம்பியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையை அபிவிருத்தியின் பக்கம் திருப்ப வேண்டும் என்றால் அதில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைந்துகொள்ள வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட தீர்மானத்தை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த காலத்தில் எமது ஆட்சியில் நாட்டின் அபிவிருத்தியில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைத்துக் கொள்வது நாட்டினை காட்டிக் கொடுக்கும் செயல் எனவும், நாட்டினை விற்கும் நடவடிக்கையை நாம் எடுப்பதாகவும், தேசத்துரோக செயல் எனவும் தொடர்ச்சியாக எம்மை விமர்சித்தவர்கள், அன்று மக்களை ஏமாற்ற கூறிய பொய்களில் இன்று அவர்களே சிக்கிக் கொண்டுள்ளனர்.
அன்று கூறிய பொய்களினால் இன்று அவர்களின் ஆட்சியில் நல்ல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நினைத்தாலும் அதனால் பாரிய நெருக்கடியை சந்திக்க நேர்ந்துள்ளது.
அண்மையில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட டயர் உற்பத்தி நிறுவனம் கூட எமது ஆட்சியில் விளையாட்டு டயர் நிறுவனம் என விமர்சிக்கப்பட்ட சர்வதேச முதலீட்டாலர்களின் தொழிற்சாலை என்பதையும் கூறிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment