வட மாகாணத்தில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

வட மாகாணத்தில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கோரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதனை இடைநிறுத்துமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால், சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு இன்று பணிக்கப்பட்டது. அது தொடர்பில் கேட்ட போதே வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

´கொரோனா வைரஸ் பரவல் அதிக அபாயம் உள்ளதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருவோரை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை அவசியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவசர அவசியம் ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வரும் நபர்களை சுயதனிமைப்படுத்த முடியும்´ என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment