இலங்கையின் கேந்திர முக்கியத்தினை விடவும் ஜனநாயக விழுமியங்களிலேயே ஜோ பைடன் நிருவாகம் அதீத கரிசனை கொள்ளும் - கலாநிதி தயான் ஜயதிலக - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

இலங்கையின் கேந்திர முக்கியத்தினை விடவும் ஜனநாயக விழுமியங்களிலேயே ஜோ பைடன் நிருவாகம் அதீத கரிசனை கொள்ளும் - கலாநிதி தயான் ஜயதிலக

(ஆர்.ராம்)

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் தலைமையிலான நிருவாகம் இலங்கையின் கேந்திர முக்கியத்தினை விடவும் ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமை விவகாரங்கள், சமத்துவம், சுயாதீன நீதித்துறை, சமூக குணாம்சங்கள் உள்ளிட்டவற்றிலேயே அதீதமான கரிசனைகளைக் கொண்டிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் சர்வதேச உறவுகள் தொடர்பான மூத்த ஆலோசகரும், இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், சமத்துவம், சுயாதீன நீதித்துறை உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புக்களிலும் விமர்சனங்களுக்குரிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதனை விடவும், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் சாதாரண பிரஜைகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான பரிந்துரையை செய்திருக்கின்றார். ஜனநாயகம், மனித உரிமைகள் விடயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் மீண்டெழ வேண்டிய நிலையில் இருக்கும் இலங்கையில் இராணுவப் பயிற்சிக்கான யோசனையை முன்வைப்பதானது ஆபத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. 

ஏற்கனவே நாட்டின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ளவரும், அவரைச் சூழ்ந்துள்ளவர்களும் இராணுவப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். சிவில் நிருவாகத்தில் இராணுவத்தினரின் உள்ளீர்ப்புக்கள் விமர்சிக்கப்படுகின்றது. 

இவ்வாறான நிலையில் விடைபெற்றுச் சென்ற டொனால்ட் ட்ரம்ப் நிருவாகத்திற்கு முற்றிலும் எதிரான போக்குடையதாகவே பைடனின் நிருவாகம் அமையப்போகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் ட்ரம்ப் வாதிகளாகவே இருக்கின்றனர். அவருடைய செயற்பாடுகளை ஒத்த சில நிகழ்வுகள் இங்கும் நடைபெற்றிருக்கின்றன. 

இலங்கையின் ஆட்சியாளர்களும் முழுமையான அதிகாரம் தமது கைகளில் உள்ளது என்ற அடிப்படையிலேயே சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் பிரதிபலிப்புக்களைச் செய்கின்றார்கள். மிருசுவில் படுகொலையில் குற்றவாளியாக காணப்பட்டவருக்கு பொதுமன்னிப்பளித்தமை முதல் பல விடயங்களை உதாரணமாக கூற முடியும். 

ஆகவே ஜனாதிபதி பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இராஜாங்க செயலாராக நியமிக்கப்படவுள்ள அன்டனி பிளிங்டன், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லொயிட் அவுஸ்ரின் உள்ளிட்டவர்கள் ஜனநாயகம் தொடர்பில் அதீத கரிசனை உடையவர்கள். 

அவர்கள் மீண்டும் உலக நாடுகளுடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த முனையும் போது ஜனநாயகம் உள்ளிட்ட இதர விடயங்கள் தொடர்பில் குறைபாடுகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு நேரடியாகவே சுட்டிக்காட்டத் தயங்கமாட்டார்கள். ஜனநாயகத்தினை மனித உரிமை விடயங்களை வலுவிழக்கச் செய்வதற்கும் இடமளிக்க மாட்டார்கள்.

அதேநேரம், தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியானது சீனாவுடன் வர்த்தக உறவுகளைக் கடந்ததொரு உறவினைப் பேணுவதற்கு முற்படுகின்றது. குறிப்பாக சீன கம்னியூஸ்ட் கட்சியுடன் பொதுஜன பெரமுனவும் இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. 

அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான சீன தூதுவரின் வாழ்த்துச் செய்தியில் ஒரேபட்டி ஒரே மண்டலம் முன் முயற்சி திட்டம் இலங்கை ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளீர்க்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இவை சீனாவுடன் இரு தரப்பு உறவுகளைத் தாண்டியதொரு பந்தத்தினை கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. 

ஆகவே பூகோள அரசியலில் அமெரிக்க இந்த விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்கின்றபோது, ஜனநாயகம், மனித உரிமைகள் விடயங்களில் இறுக்கமான நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment