முத்துராஜவல ஈரவலயப் பகுதியை அழிக்கும் செயற்பாடுகள் அரச அனுமதியுடனே இடம்பெறுகிறது - பஹியங்கல ஆனந்த சாகர தேரர் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

முத்துராஜவல ஈரவலயப் பகுதியை அழிக்கும் செயற்பாடுகள் அரச அனுமதியுடனே இடம்பெறுகிறது - பஹியங்கல ஆனந்த சாகர தேரர்

(செ.தேன்மொழி)

முத்துராஜவல ஈரவலயப் பகுதியை பாதுகாப்பதற்காக இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன், அரசியல் தலைவர்களையும், அரச அதிகாரிகளையும் தம்வசப்படுத்திக் கொண்டு இயற்கை வளங்களை அழிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பஹியங்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டார்.

முத்துராஜவல ஈரவலயப் பகுதியை பாதுகாப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள பேராயரின் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முத்துராஜவல ஈரவலயப் பகுதியை அழிக்கும் செயற்பாடுகள் அரச அனுமதியுடனே இடம்பெற்று வருகின்றன. மக்களின் வாழ்வதற்கான உரிமையையும், சுவாசிப்பதற்கான உரிமையையும் கவனத்திற் கொள்ளாமலே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகள் மழை காலத்தில் வெள்ளத்தில் மூழ்குவதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த செயற்பாடுகள் அனைத்தும் அரச அனுமதியுடனே இடம்பெற்று வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டே சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை தங்களிடமுள்ள அடியாட்களை பயன்படுத்தி அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர். இந்த பகுதிகளில் அடியாட்களின் ஆதிக்கம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த பகுதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முகாமொன்றை ஸ்தாபிப்பதற்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

இயற்கை வளங்களை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு வெளிநாட்டில் வளரும் பூஞ்செடிகளை கொண்டுவந்து இங்கு நாட்டுவதன் ஊடாக நிறைவேற்ற முடியாது. எமது பாரம்பரிய தாவரங்களை பாதுகாப்பதன் ஊடாகவே இயற்கை வளமும் பாதுகாக்கப்படும். அதனால் அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, முத்துராஜவலையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment