(செ.தேன்மொழி)
முத்துராஜவல ஈரவலயப்பகுதி அரசுக்கு சொந்தமானது, அதனை தனியாருக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளினால் அப்பகுதி வாழ் மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும். அதனால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த மோசடி செயற்பாட்டுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள அரசாங்கமொன்றிற்கு தேசிய சொத்துக்களை பாதுகாத்து வழிநடத்தவே அனுமதி வழங்கப்படுகின்றது. மாறாக அவற்றை தங்களது சொத்துக்கள் என்று கருதி விற்பனை செய்வதற்கும், அடகு வைப்பதற்கும் அல்ல என்றும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
முத்துராஜவல ஈரவலயப் பகுதியை பாதுகாப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள பேராயரின் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை விசேட ஊடகச்சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பஹியான்கல ஆனந்த சாகர தேரர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேந்திரத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த வித்தானகே, முத்துராஜவல பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் தினுஷ நானயக்கார மற்றும் மாவட்ட ஆயர்கள் பலரும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்தனர். இதன்போதே கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment