அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டதிற்கும் நான் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் - ஜனாதிபதி கோத்தாபய - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டதிற்கும் நான் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் - ஜனாதிபதி கோத்தாபய

(ஆர்.யசி)

இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்றுமுழுதாக முதலீடாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டதிற்கும் நான் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவை சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது ஒரு சில நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளன. துறைமுக அபிவிருத்தி விடயங்களில் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றனர். 

இதேபோன்று தான் எம்.சி.சி ஒப்பந்தம் குறித்த சிக்கல்கள் எழுந்த வேளையில் குழுவொன்றை அமைத்து குறித்த ஒப்பந்தத்தின் நன்மை தீமைகளை ஆராயவும் எனக்கு அறிவிக்கவும் வலியுறுத்தினேன். இந்த விடயங்களை ஆராய்ந்த குழு, எம்.சி.சி ஒப்பந்தம் மோசமானது எனவும் அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவும் கூறினார்கள். 

எனவே இந்த நிலைமைகளை அமெரிக்காவிற்கு அறிவித்து அவர்கள் முன்வைத்த முறைமைக்கு அமைய நடைமுறைப்படுத்த முடியாது என அறிவித்தோம். அவர்களின் ஒப்பந்தத்தில் இருந்து நாம் வெளியேறிவிட்டோம். இன்று நாட்டில் எம்.சி.சி பிரச்சினை இல்லை. அதனை நாம் நிறுத்திவிட்டோம். இப்போது இது குறித்து எவரும் எதுவும் பேசுவதில்லை. 

அதேபோல் தற்போது எழுந்துள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்த உடன்படிக்கை, முன்னைய ஆட்சியில் ஜனாதிபதி, இந்திய பிரதமர் இருவருக்கும் முன்பாக அப்போதைய அமைச்சர் சாகல ரத்நாயக இந்திய பிரதிநிதிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தமொன்று உள்ளது. 

நான் ஆட்சிக்கு வந்ததும் இந்த உடன்படிக்கைகளை செய்ய மாட்டேன் என தூக்கி எரிய முடியாது. அவ்வாறு செய்தால் தவறான எண்ணக்கருவொன்று உருவாகும். ராஜபக்ஷக்கள் அனைத்தையும் சீனாவிற்கே கொடுப்பார்கள் என கூறப்படும். இது முறையானது அல்ல. நாம் எந்த நாட்டுடனும் தொடர்புபட்டு செயற்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad