வடக்கும், தெற்கும் இணையவே முடியாதென்பதை மீண்டும் எடுத்து காட்டி நிற்கின்றது பல்கலை தூபி இடித்தழிப்பு விவகாரம் - அனந்தி சசிதரன் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

வடக்கும், தெற்கும் இணையவே முடியாதென்பதை மீண்டும் எடுத்து காட்டி நிற்கின்றது பல்கலை தூபி இடித்தழிப்பு விவகாரம் - அனந்தி சசிதரன்

வடக்கும், தெற்கும் இணையவே முடியாதென்பதை மீண்டும் எடுத்து காட்டி நிற்கின்றது பல்கலை தூபி இடித்தழிப்பு விவகாரம் என முன்னாள் வட மாகாண மகளிர் விவகார அமைச்சரும், ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில், போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவிடங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதும் உலகப்பொது நீதி. அதையும் மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வரிசையாக நசுக்கி வரும் இந்த அரசின் சிந்தனையின் இறுதி வடிவமாக, யாழ். பல்கலைகழகத்தில் அமைந்திருந்த தூபி இடித்தழிக்கப்பட்டிருக்கின்றது.

இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எஞ்சிய எமது நினைவிடங்களையாவது, சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளிடமிருந்து பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் வட, கிழக்கு வாழ் தமிழர்கள் அனைவரும் இருக்கின்றோம்.

ஆகவே எம் ஒட்டு மொத்த தமிழினத்தின் நிலைப்பாட்டை ஜனநாயக வழியில், அழுத்தம் - திருத்தமாக நாளைய தினம் பேரினவாத அரசிற்கு எடுத்து சொல்லும் விதமாக ஹர்த்தால் போராட்டத்திற்கு பூரண ஆதரவை ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் வழங்குவதாக அவர் ஊடக அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். 

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு - கிழக்கு தழுவிய மாபெரும் ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சியினர், சர்வ மத பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad