இலங்கையில் 70 வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

இலங்கையில் 70 வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(ஆர்.யசி)

இந்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் 70 வீதமானவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் எனவும் இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகளில் உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமானவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதுடன், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 50 வீதமானவர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.

கொவிட்-19 செயலணி குழுக் கூட்டத்தில் இறுதியாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைகள் இன்னமும் அச்சுறுத்தல் மட்டத்திலேயே உள்ளது, ஒரு வைரஸ் பரவல் மிக மோசமாக நாடு பூராகவும் பரவிய பின்னர் உடனடியாக அதில் இருந்து விடுபட முடியாது, உலகில் அனைத்து நாடுகளும் இன்று இவ்வாறான நெருக்கடி நிலைமைகளையே எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது உலக நாடுகள் கொவிட் வைரஸ் தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் ஒரு சில தடுப்பூசிகளை பரிந்துரைத்துள்ளனர். அவற்றின் தரம் குறித்து இன்னமும் நிச்சயமான தீர்மானம் ஒன்று எடுக்கப்படவில்லை என்றாலும் கூட இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இவை கூட தற்காலிக நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளாக இருக்குமே தவிர நிரந்தரமான தடுப்பூசிகளாக இவை பிரகடனப்படுத்தப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே தற்போதைய நிலைமைகளை இலங்கை கையாண்டு வரும் செயற்பாடுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமான மட்டத்தை கண்டுள்ளதாக நாம் கருதுகின்றோம்.

ஆனால் ஒரு சில விடயங்களில் குறிப்பாக தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் சுகாதார துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. 

அதேபோல் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் கூட சுகாதார தரப்பினர் துரிதமாக செயற்பட ஆரம்பித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 34 இலட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகிறது. இது இலவசமகாக உலக சுகாதார ஸ்தாபனம் எமக்கு வழங்கும் தடுப்பூசிகளாகும்.

அது தவிர்ந்து மேலும் 50 வீதமானவர்களுக்கும் கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடியும். அவை ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் நிதி உதவியில் நாட்டில் 50 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும், ஆகவே ஒட்டு மொத்தமாக 70 வீதமானவர்களுக்கு இந்த ஆண்டு நடுப்பகுதியில் கொவிட் வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad