ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Saturday, January 23, 2021

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் விமல் வீரவன்ச

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் கடந்த காலத்தில் மிகவும் சிக்கலான பல சவால்களை வெற்றி கொள்ள முடிந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்ததோடு மாத்திரமன்றி, சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்க முடியாத வகையில் இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

செத்சிறிபாய மூன்றாவது கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது கடந்த அரசாங்கம் எப்.சி.ஐ.டி என்ற சட்டவிரோத பொலிஸ் பிரிவைப் பயன்படுத்தி அரச ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அவர்கள் பணிபுரிய முடியாத சூழ்நிலையொன்றை உருவாக்கியது. எனினும் அவர்கள் எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி செயற்திறன் மிக்க வகையில் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய சூழ்நிலையை நாம் தற்போது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்டதைப் போன்று புதிய கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் போது சமூக வலைத்தளங்களில் அது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது வெறுமனே கட்டடமொன்றை நிர்மாணிப்பது மாத்திரமல்ல. அதன் பின்னர் அங்கு பணிபுரியும் அரச சேவையாளர்களுக்கான வசதிகள் உயரும் போது மக்கள் பெறும் சேவையின் தரமும் செயற்திறனும் மேம்படும். அது நாட்டின் பொருளாதாரத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

கடந்த காலங்களில் எதிர்கொண்ட மிகவும் சிக்கலான சவால்களைக் கூட மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் வெற்றி கொள்ள முடிந்தமை தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்ததோடு மாத்திரமன்றி, கடந்த காலத்தில் இடம்பெற்ற சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்க முடியாத வகையில் இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோன்று போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முறியடிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலொன்றை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment