இன்று முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் : பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அதிரடி அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

இன்று முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் : பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அதிரடி அறிவிப்பு

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் உள்ள நிறுவனங்கள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட தொழில் ஸ்தானங்களிலும் பொது போக்கு வரத்தின் போதும், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக இன்று முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் உள்ள நிறுவனங்கள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட தொழில் ஸ்தானங்களிலும் பொது போக்கு வரத்தின் போதும், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கபடுகின்றதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதில் சுகாதார பிரிவினருடன் பொலிஸாரும் இணைந்து செயற்படவுள்ளனர். பொது போக்கு வரத்து தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. சமூக இடைவெளியைப் பேணல், முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கான வசதிகள், உடல் வெப்பநிலை அளவிடுதல் உள்ளிட்டவை பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

மேல் மாகாணத்தை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2381 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் நேற்று முன்தினத்தில் மாத்திரம் முகக் கவசம் அணியாத 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் 103 பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுள் ஒருவருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எஞ்சிய 63 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் இன்னும் (நேற்று பகல் வரை) கிடைக்கவில்லை.

கடந்த 5 ஆம் திகதி முதல் இதுவரையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 2191 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 1180 பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்கும், 1011 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். 

பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் 700 பேருக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. எனினும் இந்த பரிசோதனைகளின் போது 24 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேல் மாகாணத்தில் காணப்படும் மீன் சந்தைகளில் 580 பேருக்கு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad