தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, தரிசு நிலங்களை பகிர்ந்தளித்தால் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை காணலாம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 20, 2021

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, தரிசு நிலங்களை பகிர்ந்தளித்தால் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை காணலாம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

சிறுதோட்ட தேயிலை உரிமையாளர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது குறைந்துள்ளமையால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற முற்பகல் 10 மணிக்கு கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கல் சமர்ப்பணம், கேள்விநேரத்தின் பின்னர் 27/2 கீழ் எழுப்பிய கேள்வியின் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைக்கு அந்நிய வருவாயை ஈட்டித்தரும் பிரதானதுறைகளில் தேயிலைத் தொழில்துறையும் முக்கிய இடம் வகிக்கிறது.

பெருந்தோட்டத்துறை, சிறுதோட்டத்துறை என்ற அடிப்படையில் இலங்கையில் தேயிலைத்துறை செயல்படுகிறது. ஒரு காலத்தில் பெருந்தோட்டத்துறையில் அதிகமான தேயிலை உற்பத்தி இடம்பெற்ற போதிலும் தற்போது மொத்த தேயிலை உற்பத்தியில் 75 சதவீதமான உற்பத்தி சிறுதோட்டங்களின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகிறது.

தேயிலை உற்பத்தியில் சிறு தோட்ட உற்பத்தியாளர்களின் செயல்திறன் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 20 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிறு தோட்ட தேயிலைத் உற்பத்தியாளர்களாக உள்ளனர். நாட்டின் முழு சனத் தொகையில் 10 சதவீதமானவர்கள் சிறு தோட்ட தேயிலை உற்பத்தியாளர்களாகவுள்ளனர்.

எமது நாட்டு தேயிலைக்கு உலக சந்தையில் பெரும் வரவேற்புள்ளது. ஒரு வடத்திற்கு 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. என்றாலும் சமகாலத்தில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது. தேயிலை அறுவடை குறைவாக இருந்தமையே இதற்கு காரணம்.

இதனால் தேயிலைத் தொழில்துறையை போன்று சிறு தோட்ட உரிமையாளர்களுக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

சமகால அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகள் மீது அதிக கவனம் செலுத்துவதால் சிறுதோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிறுதோட்ட உடமையாளர்கள் குறித்து கவனம் செலுத்தினால் நாட்டின் அந்நிய வருவாய் குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கும் என்பதுடன், அவர்களது வாழ்வாதாரமும் அதிகரிக்கும். 

சிறுதோட்ட உடமையாளர்களின் பிரச்சினையை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருத வேண்டும். இவர்களிடம் செஸ் வரி அறவிடப்படுகிறது. அவ்வாறு அறவிடப்படும் வரியானது சமகாலத்தில் தேயிலை உற்பத்தி தொழில்துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் பயன்படுத்தப்படுவதில்லை. 

சிறுதோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் அதேவேளை, தரிசு நிலங்களை தற்போது தேயிலைத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பகிர்ந்தளித்தால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment