வெளிக்கள பணிகளில் ஈடுபட்டு வரும் மிருக வைத்திய அதிகாரிகளின் சேவையை குறை மதிப்பீடு செய்வது காரணமாக, சௌபாக்கிய நோக்கு என்ற திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திரவப் பாலில் தன்னிறைவு என்ற இலக்கை அடைய முடியாது போகும் என அரச மிருக வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் ருவன் பண்டார தெரிவித்தார்.
பேராதனையில் உள்ள மத்திய மாகாண விலங்குற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள காரியாலயத்தில் நேற்று முன்தினம் (5) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அரச மிருக வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தாவது விலங்குற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் விசேட தரத்திற்கான பதவி உயர்வு தொடா்பான நேர்முகப் பரீட்சையில் வெளிக்கள பணிகளில் ஈடுபட்டு வரும் மிருக வைத்திய அதிகாரிகளின் சேவையை குறை மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களது சேவை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மேற்படி புறக்கணிப்பு காரணமாக வெளிக்களத்துறை அனுபவம் இல்லாதவர்கள் பணிப்பாளர் நாயகம், மேலதிக செயலாளர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கு என்ற திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திரவப் பாலில் தன்னிறைவு என்ற இலக்கை அடைய முடியாது போகும் என்றார்.
மேலே குறிப்பிட்ட விசேட தரத்துக்குரிய பதவிகள் 5 உள்ளதாகவும் அதற்காக பதவி அணியினரைத் தெரிவு செய்ய நடத்தப்பட்ட நேர்முகக் குழுவில் வெளிக்கள அனுபவம் கொண்ட எவரும் இல்லாத காரணத்தால் அத்துறை புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித்தொடர்பு கொண்டவர்கள் வௌிக்கள உத்தியோகத்தர்களாகும். அவர்களது பிரச்சினை தேவை போன்றவற்றை அறிந்த உயர் அதிகாரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். இப்படிச் சென்றால் காலப் போக்கில் இத்துறை செயலற்றுப்போக இடமுண்டு என்றும் தெரிவித்தார்.
இலங்கை பரிபாலன சேவை அதிகாரிகள் மூவரும் பல்கலைக்கழக விவசாய மற்றும் மிருக வைத்திய பீட பேராசியர்கள் இருவருமாக 5 பேர் நேர்முகப் பரீட்சைக் குழுவில் இருந்தனர். இவர்களுக்கு மிருக வைத்தியர்களது வெளிக்கள அனுபவம் கிடையாது.
இதன் காரணமாக மிருக வைத்திய வெளிக்கள அனுபவம் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்றார்.இதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு பிரிவு பறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே நடை பெற்ற நேர்முகப் பரீட்சையை இரத்துச் செய்து புதிய தேர்வு ஒன்று நடத்தி ஜனாதிபதி அல்லது தொடா்புடைய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment