அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றி அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் திகதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும். நான் எப்போதும் தெரிவித்து வந்ததை போல, சட்டப்பூர்வ வாக்குகள் எண்ணப்படும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். மிகச்சிறந்த முதலாவது பதவிக் காலத்தின் முடிவை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கும் வேளையில், அமெரிக்காவை மிகச்சிறந்ததாக மீண்டும் ஆக்குவதற்கான எங்களுடைய போராட்டம் தொடரும்," என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டிரம்பின் சார்பில் 60 க்கும் அதிகமான வழக்குகள் பல்வேறு மாகாணங்களில் தொடரப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் டிரம்புக்கு தோல்வியே மிஞ்சியது.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு நாடாளுமன்றம் உறுதிப்படுத்தியது.
இதையடுத்து ஜோ பைடனை ஜனாதிபதியாகவும் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதியாகவும் அங்கீகரிக்கும் நடைமுறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
அங்குள்ள பென்சில்வேனியா, அரிஸோனா ஆகிய மாகாணங்களின் வாக்குகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டபோதும் அதை செனட் சபையும் மக்கள் பிரதிநிதிகள் சபையும் நிராகரித்தன. இதைத் தொடர்ந்து அனைத்து மாகாணங்களிலும் பதிவான தேர்தல் சபை வாக்குகளை இரு அவைகளும் ஏற்றுக் கொண்டன.
நடைமுறை மரபுக்கு ஆதரவாக நின்ற மைக் பென்ஸ்
முன்னதாக, நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய வரலாறு காணாத கலவரத்துக்குப் பிறகு மீண்டும் கூடிய நாடாளுமன்ற செனட் அவையில், ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து குடியரசு கட்சியினர் பதிவு செய்த ஆட்சேபனைகளை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்தார்.
இதையடுத்து செனட் அவையில் பலத்த கைத் தட்டல் எழுந்தது. குடியரசு கட்சியின் ஆட்சேபனையில் எந்த செனட் உறுப்பினரும் கையெழுத்திடவில்லை என்பதால் அது நிராகரிக்கப்பட்டது.
ஜோர்ஜா மாநிலத்தில் இருந்து கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோடி ஹைஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு ஆட்சேபனையை பதிவு செய்திருந்தார்.
மர்ஜோரி டெய்லர் கிரீன் என்ற இன்னொரு ஜோர்ஜா பிரதிநிதி மிஷிகன் மாநில தேர்தல் சபை வாக்குகள் குறித்து ஆட்சேபனை செய்தார். ஆனால், அதுவும் ஏற்கப்படவில்லை.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த காலத்தில் கியூ அனான் சதிக் கோட்பாட்டை ஆதரித்தவர்.
அலபாமா மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோ ப்ரூக்ஸ் நவேதா மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆட்சேபனை செய்தார். அதுவும் ஏற்கப்படவில்லை.
கலவரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், அமெரிக்க கேப்பிடல் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என்று குறிப்பிட்டார். இவரும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற அதே தேர்தலில் அவரது சக போட்டியாளராகவே போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பென்சில்வேனியா ஆட்சேபனை 7 வாக்கு மட்டுமே பெற்று தோல்வி
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட ஆட்சேபனை மீது 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் அவையில் வாக்கெடுப்பு நடந்தது.
இந்த அவையில் தற்போது ட்ரம்பின் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மை பெற்றுள்ளது என்றபோதும் இந்த ஆட்சேபனைக்கு எதிராக 92 வாக்குகள் பதிவாயின. ஆதரவாக 7 வாக்குகள் மட்டுமே பெற்று அந்த ஆட்சேபனை தோற்றுப் போனது.
இதனால், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்பதில் இருந்த கடைசி சிக்கலும் நீங்கியது. வரும் 20ம் திகதி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். அதன் பின்னர் டிரம்ப், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வெள்ளை மாளிகையை புதிய ஜனாதிபதி ஜோ பைடனிடம் ஒப்படைப்பார்.
நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்த கலவரத்தைத் தொடர்ந்து அவரது சொந்தக் கட்சியிலேயே அவரது ஆட்சேபனைகளுக்கு ஆதரவு இல்லாமல் போனதை இது காட்டுகிறது.
டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டதனால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment