வாழைச்சேனை பிரதேசத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவசர உயர்மட்டக் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

வாழைச்சேனை பிரதேசத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவசர உயர்மட்டக் கலந்துரையாடல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் வெளி மாவட்டத்திலிருந்தும் வருகை தந்து வாழைச்சேனை பிரதேசத்தில் மீன் தொழில் செய்யும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவசர உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை வாழைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை 04ம் வட்டார கிராம உத்தியோகத்தர் திருமதி றைஸா முபாறக், பிரதேச சபைத் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.அஷ்ரப், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன், வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சபை உறுப்பினர்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, வாழைச்சேனை பிரதேசத்திற்கு வெளி பிரதேசத்திலிருந்து வரும் மீன் விற்பனையாளர்கள், படகு மீன்பிடித் தொழிலாளர்கள், மீன் கொள்வனவாளர்கள் வருகை தரும் போது இரண்டு நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் மற்றும் குறித்த பிரதேசத்தின் மீன்பிடித் திணைக்களத்தின் அனுமதிக் கடிதத்துடன் வருகை தந்தால் மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.

அத்தோடு, அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் வருகை தருபவர்களை அவர்களது பிரதேச சுகாதார வைத்திய திணைக்களத்துக்கு அறிவித்து, அவர்களது பிரதேசத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலிருந்து வெளி மாவட்டத்திற்குச் செல்லும் மீன் விற்பனையாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், மீன் கொள்வனவாளர்கள் செல்லும் போது பீ.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் மற்றும் மீன்பிடித் திணைக்களத்தின் அனுமதிக் கடிதம் பெற்றதன் பிற்பாடு செல்ல வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ள வெளி மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை தங்கள் பகுதிக்கு எவ்வாறு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

No comments:

Post a Comment