இந்தோனேசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜாவா தீவின் வான் பகுதியில் சுமார் 5.6 கிலோ மீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீவுதான் இந்தோனேசியாவிலேயே அதிக அளவில் மக்கள் வாழும் தீவு.
இதுவரை மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. எந்த உயிரிழப்புகளும் இதுவரை தெரியப்படுத்தவில்லை.
செமெரு மலைச் சரிவில் வாழும் கிராம மக்கள் இந்த வெடிப்பைக் குறித்து கவனமுடன் இருக்க வேண்டுமென தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் எச்சரித்திருக்கிறார்கள்.
எரிமலை வெடிப்பு தொடர்பன காணொளியில், 3,676 மீட்டர் உயரம் கொண்ட எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல் பல வீடுகளின் மேல் இருப்பதைக் காட்டுகிறது.
"சம்பர் முஹுர் மற்றும் குரஹ் கொபான் ஆகிய கிராமங்கள், எரிமலை வெளியேற்றும் வெப்பத்தின் பாதையில் இருக்கிறது" என உள்ளூர் அதிகாரி தோரிகுல் ஹக் (16) கூறினார்.
குராஹ் கொபான் ஆற்றுப் படுகையில் வசிக்கும் மக்கள் குளிர்ச்சியான எரிமலை குழம்பு (Cold Lava) என்றழைக்கப்படும் ஒரு வகையான எரிமலைக் குழம்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. கடுமையான மழைப் பொழிவுடன் எரிமலைக் குழம்பு சேரும் போது இந்த குளிர்ச்சியான லாவா உருவாகிறது.
செமெரு எரிமலை வெடிப்பு நேற்றுமுன்தினம் (16) மாலை உள்ளூர் நேரப்படி 5.24 மணிக்கு (ஜி.எம்.டி 10.24) நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியா முழுவதும் 120 க்கும் மேற்பட்ட சுறுசுறுப்பான எரிமலைகளை அரசாங்க நில அதிர்வு ஆய்வாளர்கள் கண்காணிக்கின்றனர்.
இந்தோனேசியா 'ரிங் ஆஃப் ஃபயர்' (எரிமலை வளையம்) என்றழைக்கப்படும் பசிபிப் பகுதியில் அமைந்திருக்கிறது. புவியின் நில அடுக்குகள் மோதிக் கொள்வதால் அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவைகள் நிகழும்.
செமெருவை 'மிகப் பெரிய மலை' என்பார்கள். இதுதான் ஜாவாவில் இருக்கும் உயரமான செயல்பாட்டில் இருக்கும் எரிமலை. அதோடு இந்தோனீசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று.
இந்த எரிமலை கடந்த டிசம்பர் 2020 இல் வெடித்தது. அப்போது சுமாராக 550 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
கடந்த சில வாரங்களில் இந்தோனேசியா பல நிலச் சரிவுகள், சுலாவசித் தீவில் பலமான நிலநடுக்கம், ஸ்ரீவிஜயா விமான விபத்து என பல பிரச்சனைகளை எதிர்கொண்டது நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment