இந்தியாவிலிருந்து எதிர்வரும் புதன்கிழமை ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு, முதற் கட்டமாக சுகாதார பிரிவினருக்கு அடுத்து இராணுவத்தினருக்கு வழங்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

இந்தியாவிலிருந்து எதிர்வரும் புதன்கிழமை ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு, முதற் கட்டமாக சுகாதார பிரிவினருக்கு அடுத்து இராணுவத்தினருக்கு வழங்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதியான 600,000 பேருக்கான தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

களுத்துறை, வலல்லாவிட்ட பகுதியில் நடைபெற்ற "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்வின் பங்கேற்ற ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதில் சுமார் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி கிடைத்த மறுநாளே அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, முதற் கட்டமாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் முன்னிலையில் உள்ள, வைத்தியர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார பிரிவினருக்கும் அதனைத் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டுள்ள இராணவத்தினருக்கும் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்டும் என அவர் கூறினார்.

இந்நடவடிக்கையுடன் இணைந்தவாறு, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ரா செனெகா (Oxford - AstraZeneca) தயாரிப்பு தடுப்பூசியை, அவசர நிலைக்கு பயன்படுத்தும் வகையில், இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, குறித்த தடுப்பூசியை இலங்கைக்கு அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியை வழங்குவது தொடர்பான ஒத்திகை இன்று (23) நடத்தப்படும் என, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான ஒத்திகைகள் இன்று பிலியந்தல பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம், பிலியந்தல பிரதேச வைத்தியசாலை, ராகமை போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad