இந்தியா, பாகிஸ்தான் தத்தமது நாடுகளில் உள்ள அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை பரிமாறிக் கொண்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, January 3, 2021

இந்தியா, பாகிஸ்தான் தத்தமது நாடுகளில் உள்ள அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை பரிமாறிக் கொண்டது

இந்தியாவும், பாகிஸ்தானும் தத்தமது நாடுகளில் உள்ள அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே 1988ம் ஆண்டு, டிசம்பர் 31ம் திகதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான அணுசக்தி நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை தடை செய்வதற்கானது.

இந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகளும் ஜனவரி 1ம் திகதியன்று பரஸ்பரம் தத்தமது அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை பரிமாற்றம் செய்து கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வழக்கத்தின்படி, பாகிஸ்தான் தனது அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை 11 மணிக்கு, இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் வைத்து இந்திய தூதரகத்தின் பிரதிநிதியிடம் வழங்கியது.

இதேபோன்று இந்திய அணுசக்தி நிறுவனங்களின் பட்டியல், நேற்று காலை 11.30 மணியளவில் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சத்தில் வைத்து பாகிஸ்தான் தூதரகத்தின் பிரதிநிதியிடம் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை 1992ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவில் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2019ம் ஆண்டு தாக்குதல் நடத்தி துணை ராணுவ வீரர்கள் 40 பேரை கொன்றனர். அதற்கு பதிலடி தருகின்ற வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் பறந்து அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்தன. இதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவும் பாதிக்கப்பட்டது.

கா‌‌ஷ்மீரை மத்திய அரசு 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதன் பின்னர் இந்திய, பாகிஸ்தான் உறவு மேலும் மோசமடைந்தது.

ஆனாலும் வழக்கமான நடைமுறைப்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது நாடுகளில் உள்ள அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை பரிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment