மாவடிப்பள்ளி - கல்முனை கார்ப்பட் வீதி நிர்மாணத்தினால் தமிழர்களுக்கு பாதிப்பு : நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளித்தோர் இருக்க வேறு யாருக்கோவெல்லாம் வேலை வழங்கப்படுகிறது - News View

About Us

About Us

Breaking

Friday, January 22, 2021

மாவடிப்பள்ளி - கல்முனை கார்ப்பட் வீதி நிர்மாணத்தினால் தமிழர்களுக்கு பாதிப்பு : நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளித்தோர் இருக்க வேறு யாருக்கோவெல்லாம் வேலை வழங்கப்படுகிறது

நகர அபிவிருத்தித் திட்டதின் கீழான மாவடிப்பள்ளி - கல்முனை கார்ப்பட் வீதி காரணமாக தமிழ் மக்களின் இருப்பு கபளீகரம் செய்யப்படுகிறது. எனவே கல்முனை கார்ப்பட் வீதி அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.

கல்முனை ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர்கள் பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்துள்ளனர். 

அங்கு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில் "கடந்த 25 வருடங்களாக கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் ஜீவாதாரமான வயல் காணிகளை கபளீகரம் செய்து இருப்பை இல்லாதொழிக்கும் இவ்வீதியை அமைக்க சிலர் ஒற்றைக்காலில் நின்றனர். கல்முனையில் சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றபோதிலும், அவர்களிடம் எதுவுமே கலந்துரையாடாமல் இத்திட்டத்தை அரங்கேற்ற முனைந்தனர். ஆனால் எம்மவரின் எதிர்ப்புக் காரணமாக அவர்கள் அதை கைவிட நேர்ந்தது.

தற்போது அதே திட்டத்தை அமுல்படுத்த முற்பட்டுள்ளார்கள். 1 இலட்சம் கிலோ மீற்றர் கார்ப்பட் வீதியமைக்கும் திட்டத்தின் கீழ் 5 கிலோ மீற்றர் நீளமான இவ்வீதியை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் தற்போது அளக்கும் வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது.

இந்தக் கணம் வரை இது பற்றி இங்கு வாழும் எந்தத் தமிழருக்கும் தெரியாது. வீதி அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் கல்முனை தமிழ்ப் பிரதேச வீதிகளை வந்து பாருங்கள். காலாகாலமாக திட்டமிட்டு பாரபட்சம் காட்டி புறக்கணிக்கப்பட்ட பல வீதிகளுள்ளன. அவற்றைப் புனரமையுங்கள்.

மாவடிப்பள்ளி பிரதேசம் காரைதீவு பிரதேச சபைக்குள் வருகின்றது. ஆனால் இவ்வீதியமைப்பு தொடர்பாக அந்த காரைதீவு பிரதேச செயலாளருக்கோ பிரதேச சபைத் தவிசாளருக்கோ தெரியப்படுத்தாமல் தன்னிச்சையாக முன்னெடுக்கிறார்கள். இது விடயத்தில் கல்முனை மேயரும் தலையிட வேண்டும். இந்த இடத்தில் பகிரங்கமாக அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இதனை முறியடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றார்.

"அதேசமயம் ஜனாதிபதியின் 1 இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டம் வறிய மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதனை இன விகிதாசார அடிப்படையில் வழங்க வேண்டும்.

கல்முனையில் இதற்கான நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளித்தோர் இருக்க வேறு யாருக்கோவெல்லாம் வழங்கப்படுகிறது. இந்த மாநகரில் ஆக இரண்டு தமிழர்களுக்கு மட்டுமே இத்தொழில் கிடைத்துள்ளது. இதே நிலைவரம் எல்லா தமிழர் பிரதேசங்களிலும் இடம்பெற்றுள்ளது. காரைதீவில் இம்முறை கிடைத்த 10 தொழில்களில் ஒரு தமிழருக்கும் வழங்கப்படவில்லை. அதிகாரிகளும் இதனை வெளியில் கூறுகிறார்களில்லை.

இதனை ஏழைத் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகவே பார்க்கிறேன். எனவேதான் இங்கு ஊடகங்களில் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன். உடனடியாக இதற்கு நீதி வழங்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

வண.சங்கரத்ன தேரர் உரையாற்றுகையில், "கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தாமதமின்றி நடத்தப்பட வேண்டும். சிலர் இதனைக் குழப்ப முயற்சிக்கின்றனர். தேர்தலை நடத்தி அந்தந்த பிரதிநிதிகளிடம் அபிவிருத்தி வேலைகளை ஒப்படையுங்கள். கிழக்கில் பின்தங்கிய தமிழர் பிரதேசங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அரச தொழில் வாய்ப்பிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்று நானும் உண்ணாவிரதமிருந்தேன். அண்மையில் கணக்காளர் வந்து போனார். அதற்குள் சிலர் தலையிட்டு அதனை நிறுத்தியுள்ளனர். நான் அரச அதிபரிடம் பேசியுள்ளேன். ஜனாதிபதியைச் சந்தித்து இங்குள்ள அத்தனை பிரச்சினைகளையும் விலாவாரியாக எடுத்துரைக்கவுள்ளேன்" என்றார்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)

No comments:

Post a Comment