சீனாவில் தயாரான ஐஸ் கிறீமில் கொரோனா - சாப்பிட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

சீனாவில் தயாரான ஐஸ் கிறீமில் கொரோனா - சாப்பிட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொகை ஐஸ் கிறீம் அடங்கிய பெட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ளனர்.

மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவிவருகிறது. சீனாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிலும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் டியன்ஜின் பகுதியில் ஐஸ் கிறீம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு பால் மா நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது .

அந்த ஐஸ் கிறீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், உடனடியாக அந்த ஐஸ் கிறீம் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

ஐஸ் கிறீம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த யாரேனும் ஒருவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஐஸ் கிறீம் தொழிற்சாலை மூடப்பட்டு அங்கு வேலை செய்து வந்த பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை அந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 4,836 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் 1,600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 700 ஊழியர்களின் சோதனை முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் இருந்து 1912 ஐஸ் கிரீம் பெட்டிகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதனை சாப்பிட்டவர்கள் யார் யார் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சீனாவில் மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment