வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பல பகுதிகள் இன்று (18.01.2021) திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டானிச்சூர் மாணவர் ஒருவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பவதி பெண் ஒருவருக்கும் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது.
அதேபோல வவுனியா நகரப்பகுயில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த நிலையில் பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடந்த ஒரு வாரமாக அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதன் பின்னர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டப்போது, ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து வவுனியா வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் மேலும் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் வவுனியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தைவீதி, கந்தசாமிகோவில் வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குளம் வீதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் தினச்சந்தை ஆகியன திறக்கப்படாத நிலையில் குறித்த வீதியால் பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் நகரின் பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் காலையிலேயே அதிகமான பொதுமக்கள் பல்வேறு தேவைகள் நிமித்தம் நகரிற்குள் வருகை தந்துள்ளமையை அவதானிக்க முடிவதுடன் அனேகமான பாடசாலைகளில் மாணவர் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment