கம்பளையில் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் முன்னாள் கடற்படை அதிகாரியிடமிருந்து 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
கம்பளை நகருக்கு கடந்த 28 ஆம் திகதி வருகை தந்துள்ள முன்னாள் கடற்படை அதிகாரி, வீடு நிர்மாணப் பணிகளுக்காக வங்கியிலிருந்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை எடுத்துள்ளார். அத்துடன் அவர் வசம் ஏற்கனவே 10 ஆயிரம் ரூபா இருந்துள்ளது.
வங்கியிலிருந்து பணம் எடுத்த பின்னர், மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு சென்ற அவர் சுமார் 2 ஆயிரம் ரூபாவுக்கு மது அருந்தியுள்ளார்.
அதன் பிறகு கம்பளை தனியார் பஸ் நிலைய பகுதியிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றுக்கு சென்றுள்ளார். அதிக மதுபோதையில் இவர் அங்கும், இங்கும் நடமாடுவதை நோட்டமிட்ட சிலர், அவரிடம் பணம் இருப்பதையும் கண்டுள்ளனர்.
தனியார் பஸ் நிலையத்திலிருந்து இலங்கை போக்கு வரத்து சபையின் பஸ் நிலையத்துக்கு அவர் சென்றபோது, பின் தொடர்ந்த மூவர், அவருடன் பழகி தமது ஆட்டோவில் ஏற வைத்துள்ளனர். மதுபோதையில் அவரும் ஏறியுள்ளார்.
பின்னர் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தெளிவு வந்ததும் முன்னாள் கடற்படை அதிகாரி, இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சம்பத் விக்கிரமரத்தினவின் வழிகாட்டலுக்கமைய, குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சி.சி.ரி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்றன. இதன் அடிப்படையில் 23, 27 மற்றும் 39 வயதுகளுடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளையடித்த 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபா பணத்தில், புதிய ஆட்டோவொன்றை வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளனர். அத்துடன் ஏனைய சில பொருட்களையும் வாங்கியுள்ளனர்.
கம்பளை நிருபர்
No comments:
Post a Comment