அரசாங்கம் இனவாதிகளின் நெருக்கடி காரணமாக இரு தலை கொள்ளி எறும்பின் நிலையில் இருப்பதால் நிலைமையை சமாளித்து விரைவில் உடல் தகனம் விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.
அலி சப்ரி ரஹீமின் வாழ்வாதாரம் அளிக்கும் திட்டத்தின் ஓர் அங்கமான பாலாவி கரம்பையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ப்ரதம எப்பரல்ஸ் தனியார் நிறுவனத்தினை (கரம்பை கார்மண்ட்) திறந்து வைத்து உரையாற்றும் போதே அலி சப்ரி ரஹீம் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்துடன் முட்டி மோதும் போக்கை தொடர்வதால் சிறுபான்மை சமூகத்துக்கு எதுவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த தேர்தலில் எதிரணி சார்பாக களத்தில் நின்ற நீங்கள் ஏன் அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு வந்தீர்கள் என்று என்னிடம் கேட்கின்றனர்.
கோட்டாபய அரசாங்கம் முழுக்க முழுக்க சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே மூன்றில் இரண்டு என்னும் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்துக்கு வந்தது. இது சிறுபான்மை மக்களை எங்கோ ஒரு மூலைக்கு தள்ளி வைக்கும் வாய்ப்பை இலகுவாக உருவாக்கும்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி - பாராளுமன்றம் என்னும் இரண்டும் கெட்டான் அதிகார போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் 20ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வந்தார்.
ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் குறிப்பிட்ட திட்டத்துக்கு ஆதரவளிக்காது விட்டிருந்தாலும் கூட அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே இருக்கும். ஆனால் எமது ஆதரவின் மூலம் ஜனாதிபதியின் அதிகார பலத்தில் முஸ்லிம்கள் எமது பங்களிப்பும் நிலை நாட்டப்பட்டுள்ளது.
இது அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள அந்தஸ்தையும் அரச உயர் மட்டத்தினரோடு சம பந்தியில் உட்கார்ந்து பேசுவதற்கும், வேலை வாய்ப்பு, அதிகாரம், அபிவிருத்தி போன்றவற்றை பெறுவதற்கும் எமக்கு வாய்ப்பளித்துள்ளது.
மாறாக ஜனாஸா எரிப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு பத்தோடு பதினொன்றாகி மக்களுக்கான வாய்ப்புகளை வீணடிக்க நான் விரும்பவில்லை. தேர்தல் காலங்களில் நான் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப அரசியல் ஊடாகவும் தனிப்பட்ட ரீதியிலும் சேவைகளை இறைவன் துணையால் வழங்குவேன்.
புத்தளம் விசேட நிருபர்
No comments:
Post a Comment