150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்

அமெரிக்க புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகின்ற 20ம் திகதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ஜனாதிபதி டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கிடையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த 6ம் திகதி நாடாளுமன்றம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து நடத்திய வன்முறை உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 

கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.

இதனையொட்டி டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், வரும் 20ம் திகதி நடக்கும் ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவிற்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பைப் புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுவார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜோ பைடன் "இது ஒரு நல்ல விஷயம், நான் அவரைப் பற்றி எண்ணிய மோசமான கருத்துக்களைக் கூட மீறி விட்டார், அவர் நாட்டிற்கு ஒரு சங்கடமாக இருந்தார், உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் அந்த பதவியை வகிக்க தகுதியற்றவர்" என்று பைடன் கூறினார்.

எவ்வாறாயினும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக பைடன் கூறினார்.

No comments:

Post a Comment