வடக்கு, கிழக்கில் திங்கட்கிழமை கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு! - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

வடக்கு, கிழக்கில் திங்கட்கிழமை கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு!

நாளை மறுநாள் திங்கட்கிழமை பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் மற்றம் ஜெனீவா விடயங்களை கையாள்வதற்கு பொறிமுறையை உருவாக்குவதற்கான கூட்டத்தில் குறித்த தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்தை ஒன்றிணைந்து வெளிப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கதவடைப்புப் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் அழைப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ளுமாறும் குறித்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தது. இதனை அரசின் கட்டளைக்கு அமைவாக யாழ் பல்கலைகழக துணைவேந்தரின் ஒத்துழைப்புடன் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட விடயத்திற்கு மேற்படி தரப்புக்கள் அனைவரும் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த மிலேச்சத்தனமான செயற்பாட்டை கண்டிக்கும் வகையில் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைவரும் கோரியுள்ளனர்.

வர்த்தக சமூகத்தினர், தனியார் போக்குவரத்தது கழகத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என அனைவரையும் திங்கட்கிழமை தங்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறு மேற்படி அனைவரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயத்தைத் தெளிவூட்டும் ஊடக சந்திப்பில் ஏழு கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் இணைந்து குறித்த அழைப்பினை இன்று விடுத்திருந்தனர்.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செ.கஜேந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைக் சுட்டணி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சிகக் கழகம் சார்பில் அனந்தி சசிதரன் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஊடக சந்திப்பின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad