பிள்ளையானுக்கு எதிரான வழக்கை தொடராதிருக்கு சட்டமா அதிபர் தீர்மானம் - படுகொலை வழக்கின் தீர்ப்பை 13 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

பிள்ளையானுக்கு எதிரான வழக்கை தொடராதிருக்கு சட்டமா அதிபர் தீர்மானம் - படுகொலை வழக்கின் தீர்ப்பை 13 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவிப்பு

பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (11) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி இந்த வழக்கில் தொடர்ந்து சாட்சிகளை முற்படுத்தி நெறிப்படுத்த தேவையில்லை எனவும் இவ்வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்க்கவில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து அதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் எதிர்வரும் புதன்கிழமையன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு கடந்த 24.11.2020 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

(புதிய காத்தான்குடி நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad