(செ.தேன்மொழி)
மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 1060 பேரில் 550 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், முகக் கவசம் அணியாத நபர்கள் தொடர்பில் மேல் மாகாணத்தில் நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பமுனுகம, கொடதெனியாவ, திவுலப்பிட்டி, கம்பஹா,மினுவாங்கொட, கணேமுல்ல, மீரிகம, வேயங்கொட, கிரிபத்கொட, பேலியகொட, கடவத்த, வத்தளை, பியகம, சப்புகஸ்கந்த, களனி, மீகஹாவத்த, பொரலஸ்கமுவ, வெல்லம்பிட்டி, ஹங்வெல்ல, நவகமுவ, கொஹத்தட்டுவ, கஹத்துட்டுவ, பிலியந்தல, மத்தேகொட, களுத்துறை தெற்கு, அளுத்கம, மத்துகம, பாணந்துறை மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளிலே இந்த சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
இதன்போது முகக் கவசம் அணியாமை தொடர்பில் 1060 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் 550 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது 14 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய 510 பேருடைய பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வரை கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.
மேல் மாணகத்தில் மாத்திரமின்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2253 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கைது செய்யப்படும் நபர்கான அன்டிஜன் மற்றும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, அது தொடர்பில் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் அழைப்பு விடுத்தால், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதன்போது விபரங்களை தெரிவிக்க வேண்டி ஏற்பட்டால், உண்மை தகவல்களை மாத்திரமே வழங்க வேண்டும்.
போலி தகவல் வழங்கும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் குற்றவியல் சட்டவிதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment